என்னை கவர்ந்த நூல் சிலப்பதிகாரம் கட்டுரை

ennai kavarntha nool katturai in tamil

தமிழில் காணப்படும் ஐம்பெரும் காப்பியங்களில் மிகவும் முக்கியமான ஒரு காப்பியமாகவே சிலப்பதிகாரம் காணப்படுகின்றது.

மக்களது வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் காப்பிய மரபுகளுக்கு உட்பட்டு இளங்கோவடிகளினால் இயற்றப்பட்ட இந்த சிலப்பதிகாரமானது தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்புகளை கொண்ட ஓர் நூலாகும்.

என்னை கவர்ந்த நூல் சிலப்பதிகாரம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சிலப்பதிகாரத்தின் அமைப்பு
  • சிறப்புக்கள்
  • சிலப்பதிகாரம் கூறும் தத்துவங்கள்
  • சிலப்பதிகாரத்தின் கவரும் தன்மை
  • முடிவுரை

முன்னுரை

தமிழ் மொழியில் பல கோடி நூல்கள் காணப்படினும் இவற்றுள் தமிழ் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம் தமிழின் தலை காப்பியம் என்று போற்றப்படும் அளவுக்கு சிறப்புடையதாகும்.

சிலம்பு + அதிகாரம் என்பன இணைந்து சிலப்பதிகாரம் என்றானது. சிலம்பு என்கிற அணியே இக்காப்பியத்தை அலங்கரிக்கின்றமையால் இப்பெயர் உருவானது. இக்கட்டுரையில் என்னைக் கவர்ந்த நூலான சிலப்பதிகாரம் பற்றி நோக்கலாம்.

சிலப்பதிகாரத்தின் அமைப்பு

இளங்கோவடிகளினால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரமானது சங்கமருவிய காலத்துக்குரியதாக அறியப்படுகின்றது. இந்த சிலப்பதிகாரத்தில் பிரதானமாக மூன்று காண்டங்கள் காணப்படுகின்றன. புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சி காண்டம் என்பன அவை ஆகும்.

இந்த மூன்று காண்டங்களும் சேர, சோழ பாண்டிய நாடுகளின் தலைநகரங்களை குறிப்பதாக ஆசிரியர் அமைத்துள்ளார். அத்தோடு 30 கதைகளாகிய சிறு பிரிவுகளையும் கொண்டதாக இந்நூல் காணப்படுகின்றது.

சிலப்பதிகாரத்தின் அமைப்பானது தமிழ் மக்களின் வாழ்வியலை மிக அழகாக சித்தரிப்பதனால் இதனை குடிமக்கள் காப்பியம் எனவும் அழைக்கின்றனர்.

சிறப்புக்கள்

சிலப்பதிகாரம் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஓர் காப்பியமாக காணப்படுகின்ற போதிலும் அதன் முக்கியமான சில சிறப்புகளை பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக காணப்படுதல், முத்தமிழ் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள் காணப்படல், நாடக பாங்கில் அமைந்திருத்தல், குடிமக்களின் காப்பியமாக இருத்தல் மற்றும் குடிமக்களை பாட்டுடைத் தலைவர்களாக கொண்டு எழுதப்பட்ட முதல் நூலாக காணப்படுதல் போன்றவாறான பல்வேறு சிறப்புகளை இந்த சிலப்பதிகாரம் கொண்டுள்ளது.

சிலப்பதிகாரம் கூறும் தத்துவங்கள்

தன்னுடைய வாழ்க்கை காலத்தில் ஒரு துறவியாக விளங்கிய இளங்கோவடிகள் இந்த சிலப்பதிகாரத்தை வடிவமைத்தமையினால் வாழ்வின் அனைத்து விழுமியங்களும், தத்துவங்களும் புலப்படுவதனைக் காணலாம்.

இந்த வகையில் சில முக்கியமான தத்துவங்கள் பின்வருமாறு. “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” அதாவது ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்,

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” அதாவது ஒருவன் செய்த ஊழ்வினை ஆனது அவனை விடாது பற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும்,

“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” அதாவது கற்பொழுக்கம் பேணும் ஒரு பத்தினிப் பெண்ணை உயர்ந்தோர் எப்பொழுதும் போற்றுவார்கள் போன்றவாறான வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை சிலப்பதிகாரம் எமக்கு எடுத்துக் கூறுகின்றது.

சிலப்பதிகாரத்தின் கவரும் தன்மை

சிலப்பதிகாரம் காப்பியமானது என்னைப் போலவே பல்வேறு மக்களை கவர்ந்த ஓர் நூலாக காணப்படுகின்றது.

இந்த வகையில் சாதாரண பொது மக்களை பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பாடப்பட்டமை, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் விவரப் பெற்றெடுத்தல், மற்றும் மூவேந்தர்கள் பற்றியும், முச்சுவை பற்றியும், முந்நீதிகள் பற்றியும், முத்தமிழ் பற்றியும் ஒரே நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதனாலும் சிலப்பதிகாரம் ஒரு கவர்ச்சித் தன்மை பொருந்திய நூலாக காணப்படுகின்றது.

இவ்வாறு சிலப்பதிகாரத்தில் காணப்படக்கூடிய தன்மைகள் அதிகமான மக்களை கவரும் அமைப்பில் அமைந்துள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

உலகத்தில் எழுந்துள்ள ஏனைய காப்பியங்கள் போன்றோ அல்லது வடமொழிக் காப்பியங்கள் போன்றோ தெய்வங்களையோ அல்லது மன்னர்களையோ காப்பிய தலைவர்களாக கொள்ளாமல் சாதாரண மக்களையே தலைவர்களாக கொண்டு இந்த நூல் உருப்பெற்றமையால் இது “குடிமக்கள் காப்பியம்” என போற்றப்படுகின்றது.

இந்த வகையில் வாழ்வின் முப்பெரும் உண்மைகளை விளக்கும் இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு நபரையும் என்னைப் போன்றே கவர்ந்து கொள்ளும் தன்மை கொண்ட ஒன்றாகவே இந்த சிலப்பதிகாரம் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

முதியோருக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்
கல்விக்கு தாய்மொழியின் முக்கியத்துவம் கட்டுரை