நாம் வாழக்கூடிய தமிழ் நாட்டில் பல்வேறு அரசியல்வாதிகள் வாழ்ந்துள்ளனர். இவர்களுள் காலத்தால் அழியாத புகழ் பெற்றவரும், தமிழக அரசியல் வரலாற்றில் தனது பேராற்றலாலும், பெரும் பணிகளாலும், அயராத உழைப்பினாலும், சாதனை மிக்க படைப்புகளாலும், தனிமுத்துரை பதித்தவராகவுமே கலைஞர் என போற்றப்படக்கூடிய முத்துவேல் கருணாநிதி அவர்கள் காணப்படுகின்றார்.
கலைஞர் பெற்று தந்த உரிமைகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- முதலமைச்சர்களுக்கான உரிமை
- பெண்களுக்கான உரிமைகள்
- ஏழை மக்களுக்கான உரிமைகள்
- மாணவர் சார் உரிமைகள்
- முடிவுரை
முன்னுரை
கலைஞர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கையானது பல்வேறு துறை சார்ந்ததாகவே காணப்பட்டது. எடுத்துக்காட்டாக அரசியல், கலாச்சாரம், சினிமா, இலக்கியம் போன்றவை குறிப்பிடலாம்.
இவற்றுள் கலைஞர் அவர்களின் அரசியல் சார் செயற்பாடுகள் யாவும் மிக முக்கியமானவையாகும். இவரது அரசியல் வாழ்க்கையில் இவர் எமக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுத்தந்ததுள்ளார் அவ்வாறான உரிமைகள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
முதலமைச்சர்களுக்கான உரிமை
இந்தியா சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் தேசிய அளவில் பிரதமரும் குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் தேசிய கொடியேற்றும் உரிமை உடையவர்களாக இருந்தனர்.
இவ்வாறான நிலையில் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பு வகித்த போது பிரதமர் இந்திரா காந்தியுடன் தேசிய அபிவிருத்தி கவுன்சிலுடனும் விவாதித்து சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவதைப் போலவே மாநிலங்களிலும் தலைமைச் செயலங்களில் முதலமைச்சர் கொடியேற்ற வேண்டும் என போராடினார்.
1974ஆம் ஆண்டு அதற்கான வெற்றியையும் பெற்று அதனை முதன் முதலில் நடைமுறைப்படுத்தினார். அத்தோடு ஏனைய முதலமைச்சர்களுக்கும் சுதந்திர தினத்தில் சுதந்திர கொடியை ஏற்றி வைப்பதற்கான உரிமையையும் பெற்றுக் கொடுத்தார்.
பெண்களுக்கான உரிமைகள்
கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக விளங்கிய காலங்களில் பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் செயற்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வகையில் 1989 ஆம் ஆண்டு பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உரிமை உண்டு என எனக்கூறி அதற்கான தனி ஒரு சட்டத்தையும் உருவாக்கி அமல்படுத்தியுள்ளார். 1973 ஆம் ஆண்டு காவல்துறையில் பெண்களும் சேருவதற்கான உரிமையை பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி பெண் காவலாளர்களையும் பெண் SI களையும் பணி அமர்த்தினார், பெண்களுக்கான சுய தொழில் சார் உரிமைகளை மதிக்கும் வகையில் 1989 ஆம் ஆண்டு சுய உதவிக் குழு திட்டத்தை அறிமுகப்படுத்தினார், பெண்களுக்கான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு உதவி திட்டங்களையும் செய்தார்.
இந்த வகையில் மேற்கண்டவாறான செயற்பாடுகளின் மூலமாக பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை கலைஞர் அவர்கள் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஏழை மக்களுக்கான உரிமைகள்
கலைஞர் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுக் கொடுத்ததைப் போலவே ஏழையும் மக்களுக்கும் பல்வேறு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு போராடியுள்ளார்.
இந்த வகையில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையான சமூகங்களின் கல்வி உரிமைகளை பெற்றுக் கொடுத்தார், அத்தோடு பிற்படுத்தப்படுவோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலன்களை உரிமைகளையும் பாதுகாப்பதற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இடைத்தரகர்களின் தலையீடுகள் இன்றி உற்பத்தியாளரும் நுகர்வோர் நேரடி தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகளை உருவாக்கினார்.
இவ்வாறாக ஏழை மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் கலைஞர் அவர்கள் மகத்தான பங்காற்றி உள்ளார்.
மாணவர் சார் உரிமைகள்
நாட்டின் எதிர்காலத்திற்கு பெண்களின் கல்வி அவசியமானது என்பதனை உணர்ந்த கலைஞர் அவர்கள் பெண் கல்வி உரிமையை பலப்படுத்தி பெண்களுக்கான பல்வேறு உதவி திட்டங்களை நல்கினார், அத்தோடு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார், மாணவர்களின் கல்விக்காக இலவச பஸ் சேவைகளையும் நடைமுறைப்படுத்தினார், மற்றும் தமிழ் விசைப்பலகையை தரப்படுத்துவதற்கான தமிழ் இணைய மாநாட்டை நடத்தி உலக தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.
இவ்வாறான செயற்பாடு மூலமாக தமிழ் தாய் மொழியில் கல்வி கற்கும் பல மாணவர்கள் பலன் பெறுகின்றனர். இவ்வாறாக மாணவர்களுக்கான பல உரிமைகளை கலைஞர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
முடிவுரை
தமிழக அரசியல் வரலாற்றில் யாவராலும் மறக்க முடியாத அளவு பெயர் பதித்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தமிழக மக்களின் பல்வேறு உரிமைகளுக்கான அடித்தளங்களையும், மக்கள் சார் பல்வேறு நலத்திட்டங்களையும் உருவாக்கிய ஒரு மாபெரும் அரசியல்வாதியாவார்.
கலைஞர் அவர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர் மக்களுக்கு பெற்றுத் தந்த உரிமைகள் போன்ற யாவும் இன்றளவிலும் மக்களால் போற்றப்பட்ட வண்ணமே உள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் கலைஞருக்கு என தனியான ஒரு இடம் உண்டு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.