கல்விக்கு தாய்மொழியின் முக்கியத்துவம் கட்டுரை

kalvikku thai moliyin mukkiyathuvam

உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் பரிச்சயமான மொழியாக அவனுடைய தாய் மொழியே இருக்க முடியும். ஒரு தனியனுடைய தனித்துவத்தை சமூகத்திற்கு எடுத்துச் செல்ல தாய் மொழியே சிறந்த ஊடகமாக அமைய முடியும்.

அத்தோடு மிகவும் பரிச்சயமான ஒன்றாக தாய்மொழி அமைந்து விடுவதனால் இம்மொழியில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் இலகுவான ஒன்றாகவும் காணப்படும்.

கல்விக்கு தாய்மொழியின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  • முன்னுரை
  • தாய்மொழி கல்வி
  • தாய்மொழிக் கல்வியின் சிறப்பு
  • சிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழி கல்வி
  • தாய்மொழி கல்வியின் இன்றைய நோக்கு நிலை
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனின் வாழ்வியலோடும் பின்னிப்பிணைந்த ஒன்றாக அவனுடைய தாய்மொழி காணப்படுகின்றது.

இங்கு வாழக்கூடிய எந்த மதத்தவராயினும் சரி, எந்த இனத்தவராயினும் சரி ஒருவருக்கு தாய் மொழியில் கல்வி புகட்டப்படுவது அவருக்கு கிடைக்க கூடிய மிகப்பெரியதொரு அதிர்ஷ்டமாகும். தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

தாய்மொழி கல்வி

தாய்மொழிக் கல்வி என்றால் என்ன என்பதை பற்றி நோக்குமே ஆனால், ஒரு மனிதனானவன் தன்னுடைய பிறப்போடு ஒன்றிய மொழியில் கல்வியைக் கற்பதுவே தாய்மொழிக் கல்வி எனப்படுகின்றது.

உலகில் பல்வேறு நாட்டவர்கள் மற்றும் இனத்தவர்கள் காணப்படுகின்ற போதிலும் அவர்கள் தங்களுடைய தாய் மொழியில் கல்வி கற்கும் போதே சிறந்து விளங்க முடியும். மேலும் ஒவ்வொரு நாட்டிலும் சிறந்த குடிமகனாகவும் திகழ முடியும்.

தாய்மொழிக் கல்வியின் சிறப்பு

உலகில் பிறந்த எந்தவொரு மனிதனாயினும் அவர் நிச்சயமாக தன்னுடைய தாய்மொழியில் மிகவும் சிறப்பான தேர்ச்சி பெற்றவராகவே காணப்படுவார்.

அதாவது இங்கு ஒருவர் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு தாய்மொழிக் கல்வி உதவியாக அமைவது அதன் சிறப்பையே எமக்கு உணர்த்துகிறது.

மேலும் குழந்தைகள் தங்களுடைய கல்வி செயற்பாடுகளை இலகுவாக ஞாபகம் வைத்துக் கொள்ளவும், சிறந்த முறையில் செயற்படவும் இந்த தாய்மொழிக் கல்வியே துணை நிற்கின்றது.

சிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழி கல்வி

ஒரு மனிதன் எத்தனை மொழிகளைக் கற்றாலும் அல்லது எந்த மொழியைக் கற்றாலும் அவனுடைய சிந்தனை ஊற்றெடுப்பது நிச்சயமாக தாய்மொழியில் தான். அதாவது ஒரு மனிதனுடைய பிறப்பில் இருந்தே அவனுக்கு உரித்தான தாய்மொழி கல்வியின் மூலம் அவனுடைய சிந்தனைகளும் வலுப்பெறுகின்றது.

தாய்மொழி கல்வி ஆனது ஒருவனுடைய பொருளாதாரத்தை உயர்த்துமா என்பதை விட ஒருவனுடைய வாழ்க்கையை சிறந்த முறையில் செம்மைப்படுத்துகின்றது. ஆகவே சிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழிக் கல்வி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தாய்மொழி கல்வியின் இன்றைய நோக்கு நிலை

நாம் வாழக்கூடிய தற்கால சூழலில் தாய்மொழி கல்வி என்பது மிகவும் அருகிய நிலைமையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலேத்தேய மயமாக்கத்தின் காரணமாக பிற மொழிகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளமையினால் தாய் மொழியின் செல்வாக்கு குன்றிப்போய் உள்ளது.

அதாவது இன்று சர்வதேச மொழியாக ஆங்கில மொழி வளர்ச்சி அடைந்து, அதனுடைய தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றமையினால் அனைத்து மக்களும் கல்வி கற்பதற்கு ஆங்கில மொழியையே தெரிவு செய்கின்றனர்.

குறிப்பாக குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி கூட இன்று தாய் மொழியில் வழங்கப்படாத நிலைமை பல்வேறு சமூகங்களில் நிலவி வருகின்றன.

முடிவுரை

இன்றைய கால சூழ்நிலையில் தாய்மொழிக் கல்வி என்பது பழமை வாதமாக குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான மக்களுடைய புரிதல்களை தெளிவுபடுத்தி தாய்மொழிக் கல்வியின் சிறப்புகளை விளங்க வைப்பதோடு தாய்மொழி கல்வி ஆனது என்றும் குறைந்து மதிப்பிட கூடியதொன்றல்ல என்பதனை உணர்த்த வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.