முதியோருக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்

muthiyorai pathukappom

முதியோருக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்

வாழ்நாள் அனுபவம், வயது என்பவற்றில் முதிர்ச்சித் தன்மை கொண்டவர்களே முதியவர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். அதாவது வயதினால் மட்டும் அல்லாமல் பல்வேறு அனுபவங்களினாலும் முதிர்ந்த நிலையில் இந்த முதியவர்கள் காணப்படுவர்.

குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் போன்ற சகலரும் இந்த முதியவர்கள் எனும் வரையறைக்குள் உள்வாங்கப்படுகின்றனர்.

முதியோரை மதித்தல்

ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டில் வாழக்கூடிய சமூகங்களின் கலாச்சாரம், மரபு என்பவற்றினை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கக் கூடியவர்களாக இந்த முதியவர்கள் காணப்படுகின்றனர்.

இதன் அடிப்படையில் முதியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்களும், பராமரிப்பு உள்ளாக்கப்பட வேண்டியவர்களாகவும் காணப்படுகின்றனர். தற்கால சூழ்நிலைகளில் முதியவர்களின் நிலை மிகவும் மோசமாகவே காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதலாம் திகதி உலக முதியவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வானது 1991ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதாவது முதியவர்களை மதித்தல், அவர்களுக்கு மரியாதை, கௌரவம் கொடுத்தல். என்பதுவே இத்தினத்தின் முக்கிய தொனிப்பொருளாகவும் கொள்ளப்படுகின்றது. இந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் காணப்படக்கூடிய முதியவர்கள் இளம் சமூகத்தை கட்டி எழுப்பக் கூடியவர்களாவர்.

நம் தலைமுறைகளின் விழுதுகளை தந்த ஆல மரங்களைப் போன்ற முதியவர்களை தலைவணங்கி மதித்து நடப்பது எம் அனைவரதும் கடமையாகும்.

முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

இன்றைய 21ஆம் நூற்றாண்டில் இளம் தலைமுறைனர்களால் பல்வேறு வகையிலும் முதியவர்கள் பாதிக்கப்படுவதனைக் காண முடியும்.

இந்த வகையில் முதியவர்கள் புறக்கணிக்கப்படுதல், முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுதல், குடும்பங்களால் கைவிடப்படுதல் மற்றும் அவமதிக்கப்படுதல். போன்றவாறான பல்வேறு பிரச்சினைகளை இளம் சமூகத்தினரால் முதியவர்கள் அனுபவிக்கின்றனர்.

இதற்குமேல் அதிகமாக முதியோர்கள் வயோதிபம் காரணமாகவும், பல்வேறு நோய்கள் காரணமாகவும், உடலியல் சக்தி இழப்புக்கள் காரணமாகவும், உடல் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைமைகளில் இன்றைய முதியவர்கள் காணப்படுகின்றனர்.

முதியோர் பராமரிப்பு சட்டம்

நாம் வாழக் கூடிய பாரத தேசத்தை பொறுத்த வரைக்கும் முதியவர்களுக்கான பராமரிப்பு சட்டமானது 2007 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு இன்றுவரையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனை காண முடியும்.

இதுவரையிலும் 23 மாநிலங்களும் அனைத்து ஒன்றிய பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளமையைக் காணலாம்.

இதன் அடிப்படையில் இச்சட்டத்தின் கீழ் குடும்பங்களால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கான பாதுகாப்புகளை வழங்குதல், உறவினர்களால் ஒதுக்கப்பட்ட முதியவர்களுக்கான சொத்துக்களை மீண்டும் வழங்குதல், முதியவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களை உருவாக்குதல் மற்றும் முதியவர்களுக்கு தேவையான சொத்துக்கள், மருந்துகள் என்பவற்றை கிடைக்கச் செய்தல் போன்றவாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனைக் காண முடியும்.

தமிழ்நாட்டில் முதியோர் நல திட்டங்கள்

இந்திய மத்திய அரசாங்கம் ஆனது முதியவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகின்ற போதிலும் இவற்றைத் தாண்டி தமிழ்நாட்டின் மாநில அரசானது முதியவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதனைக் காணலாம்.

இதன் அடிப்படையில், 65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாத மாதம் ரூபா.500 முதல் ரூபா.1000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுதல், இலவச மத்திய உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தல், இலவச அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக வழங்கப்படுதல், அரச மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி செய்ய நிதி ஒதுக்கீடு செய்தல். போன்றவாரான பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாட்டு அரசு மேற்கொள்வதனைக் காணலாம்.

முதியோரை பாதுகாப்போம்

சமூகங்களை வழிநடத்தக் கூடிய முதியவர்கள் அனுபவத்தாலும் முதுமையானவர்களாகவே காணப்படுவர். இளம் சமூகத்தை சரியான முறையில் வழிப்படுத்துவதற்கு முதியவர்களின் அறிவுரைகள் இன்றியமையாததாகும்.

இந்த வகையில் முதியவர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய கௌரவங்களையும், மதிப்பையும் உரிய முறையில் நிறைவேற்றுவதோடு, ஆதரவற்ற முதியவர்களையும், பெரியோர்களையும் மதித்து, ஆதரவளிக்கும் நட்பழக்கங்களையும் கைக்கொள்வது எமது கடமையாகும்.

நாளை எமக்கு வரும் முதுமையை இன்றிலிருந்தே நாம் மதித்து நடக்கக் கற்றுக் கொள்வது அத்தியவசியமானதாகும்.